சிதம்பரக்கல்லூரி இணைப்பாட விதான செயற்பாடுகள் சார்ந்த அபிவிருத்திட்டங்கள்

சிதம்பரக்கல்லூரி தனது வரலாற்றில் பல துறைகளில் சிறந்த பாரம்பரியத்தை கொண்டிருக்கின்றது. இவ்வாறே விளையாட்டு துறையிலும் வியத்தகு சிறந்த சாதனைகளை  நாட்டியுள்ளது. முன்னைய காலங்களில் இக்கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வீரர்களாக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பாக கரப்பந்தாட்டத்தில் தேசிய தரத்தை அடைந்தமையும் கல்லூரி வரலாற்றில் மறக்க முடியாத சாதனைகளாகும். 
 
1951  ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட போட்டிகளில் முதலாமிடத்தையும், 1948 இல் இரண்டாமிடத்தை பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். அதனை தொடர்ந்து 1956, 1957 ஆண்டுகளில் வடமராட்சி ஆசிரியர் சங்கம் நடத்திய உதைபந்தாட்ட போட்டிகளிலும்  1959 இல் யாழ் உதைபந்தாட்ட சங்க சுற்று போட்டியில் மற்றும் 1961 ஆண்டு யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டு சங்க போட்டியிலும் சிதம்பரக்கல்லூரி பங்கு பற்றி வெற்றியீட்டியிருந்தது.
 
 
முன்னாள் சிதம்பரக்கல்லூரி உதைபந்தாட்ட வீரர்/ கணக்காய்வாளர் திரு செல்வேந்திரா உதைப்பந்தாட்ட பயிற்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு.
நாட்டில் போர்சூழல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புலம்பெயர் வல்வெட்டித்துறை மக்கள் சிதைவுற்று இருந்த விஞ்ஞான ஆய்வுகூடங்கள் ஆராதனை மண்டபம் மலசல கூடங்களை புதிதாக நிர்மாணித்து பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களையும் அன்பளிப்பு செய்துள்ளனர். இதன் பயனாக இருபது வருட இடைவெளியின் பின்பு மருத்துவபீடத்துக்கு ஒரு மாணவன் தெரிவாகியுள்ளார்.
 
கற்றல் செயற்பாடு மட்டும் ஒரு மாணவனை முழு ஆளுமையுள்ளவனாக மாற்றாது. கற்றல் செயற்பாட்டுடன் ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்கள் கலந்துகொள்வது அவசியமாகிறது. இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்கள் பங்குபற்றுவதை ஊக்கப்படுத்த கரப்பந்து  விளையாட்டு திடல் மற்றும் மற்றும் கால்பந்து விளையாட்டு உபகரணங்களை சிதம்பரக்கல்லூரி சர்வதேச பழைய மாணவர்சங்க செயலாளர் ம.ராமானந் லண்டனில் இருந்து நேரடியாக வருகை தந்து அன்பளிப்பு செய்திருந்தார். தேசிய மட்ட போட்டிகளில் மாணவர்களை தயார்படுத்த வட மாகாண பயிற்றுவிப்பாளார் திரு முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் ஆர்வத்துடனும் துடிப்போடும் சிதம்பரகல்லூரி மைதானத்தில் தற்போது  பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.