சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் பசுமை புரட்சி  
கல்லூரி மைதானத்தில் நடப்பட்டுள்ள நிழல் மரங்கள்

வடமாகாணம் ஒரு காலத்தில் இப்போதுள்ளதை விடப் பசுமை வாய்ந்ததாகவும், இயற்கையின் வனப்பை இரசிப்பதற்குரிய ஓர் இடமாகாவும் விளங்கியது. ஆனால், கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தினால் மரங்களும் காடுகளும் கரிக்கட்டையாக எரிந்து கிடக்கின்றன. இதனைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்த மண்ணில் வாழுகின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. கார்த்திகை எம்மண்ணுக்கு மழை நீரைச் சிந்துகின்ற மாதம். வடமாகாண மரநடுகை மாதத்தின்மூலம், எதிர்கால சந்ததியினரையும் சூழலையும் ஆரோக்கியமான பாதைக்குக் கொண்டு செல்ல வித்திடப்பட்டுள்ளது.

கல்லூரிக்கு பெருமை சேர்த்த "நிழல் தரும் மரங்கள் நடும் வரலாற்று நிகழ்வு" மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அத்துடன் மரங்களை நட்டுப் பராமரிக்கும் ஆர்வம் அதிகரித்ததை தொடர்ந்து கல்லூரி மைதானத்திலும் நிழல் தரும் மரங்கள் நடும் தீர்மானம் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தில் நிறைவேற்றப்பட்டு மரங்கள் நடும் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

மலை வேம்பு (Mahogany), தேக்கு மரங்கள்

உள்ளூரில் கிடைக்கும் சைக்கிள் ரிம் மற்றும் மூரிமட்டையால் அமைக்கப்பட்ட கூடுகள் தயாரிக்கப்பட்டு மைதானத்தின் நாற்புறமும் சுமார் 30 மலை வேம்பு (Mahogany), தேக்கு மரங்கள் நடப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக நீரூற்றி பராமரிக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இளம் சந்ததியினருக்கு மரம் வளர்ப்பது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமைக் கிராமங்களை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப புள்ளி சிதம்பராக்கல்லூரியில் இடப்பட்டுள்ளது புத்தாண்டு நற் செய்தியாக அமையட்டும்.